Tuesday, January 05, 2010

சுவிஸ் மனுநீதி: கல்வி மறுக்கப்படும் அகதிகள்

ஐரோப்பிய நாடுகளின் சனத்தொகை சுருங்கி வருகின்றது. ஓய்வூதியம் பெறும் வயதாளிகள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டிருக்க, பிறப்புவீதம் குறைந்து வருகின்றது. சமூகத்தில் தொழில் புரியும் வகுப்பினர், நலிவடைந்த பிரிவினருக்கான சமூக நலன் கொடுப்பனவுகளை வழங்கி வருகினறனர். சமூக கொடுப்பனவுகளில் தங்கியிருப்போர் தொகை அதிகரிக்கையில் அரச செலவினமும் அதிகரிக்கும். இதனை ஈடுகட்டுவதற்காக ஐரோப்பாவில் வசிக்கும் அகதிகள், சட்டபூர்வ அல்லது சட்டவிரோத குடியேறிகள், மாணவர்கள் என அனைத்து வகை வெளிநாட்டவரின் உழைப்பையும் அரசு பயன்படுத்திக் கொள்கின்றது. இவர்களில் அங்கீகரிக்கப்படாத அகதிகள், சட்டவிரோத குடியேறிகள், மாணவர்கள் ஆகியோரின் உழைப்பு முழுமையும் தங்கியிருக்கும் நாட்டிற்கே சொந்தமாகின்றது. ஏனென்றால் இவர்கள் அரசுக்கு நேர்முக, மறைமுக வரிகளை செலுத்தும் அதே நேரம், அரசின் சமூகநலக் கொடுப்பனவுகளை எதிர்பாராதவர்கள். சுருக்கமாக சொன்னால், இவர்களின் உழைப்பு ஐரோப்பிய சமூக நலத் திட்டங்களுக்கான செலவினங்களை ஈடுகட்டுகின்றது.

சுவீடனில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில்,மேற்படி உண்மைகளை அடிப்படையாக வைத்து ஒரு செய்திக் கட்டுரை ( Sweden risks facing severe labour shortages)வெளியானது. அடுத்த பத்து வருடங்களுக்கு சுவீடனில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதை நிவர்த்தி செய்ய வெளிநாட்டு குடியேறிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. இன்று பல ஐரோப்பிய நாடுகளின் நிலைமை அது தான். அந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாற்றியவர்களில் பலர் வெளிநாட்டு மாணவர்கள். (மாணவர்களில் இந்தியர்களும் அடக்கம்). இந்த அரசு தங்களுக்கு என் நிரந்தர வதிவிட உரிமை கொடுப்பதில்லை? என்ற ஆதங்கம் அவர்களின் எழுத்துகளில் வெளிப்பட்டது. அதோடு நின்றால் கூடப் பரவாயில்லை. "படிப்பறிவில்லாத" அகதிகளுக்கு வதிவிட அனுமதியும், வேலை வாய்ப்பும் தாராளமாக வழங்கப் படுகிறது. அதே நேரம் இந்த நாட்டிற்கு தமது திறமைகளை அர்ப்பணிக்க காத்திருக்கும் "அதி புத்திசாலி" மாணவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள், என்று தமது வெறுப்பை கொட்டித் தீர்த்தனர். சந்தர்ப்பம் வழங்கினால் சேவை செய்வதற்காக எஜமான் காலடியில் காத்திருக்கும் மாணவர்கள். இவர்கள் தான், முன்பு கல்லூரி அனுமதி கிடைக்க வேண்டுமென்பதற்காக, தாய்நாடு திரும்பி தன் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று கூறி விசா பெற்றார்கள். தமது வர்க்க குணாம்சத்தை அத்தனை அழகாக காட்டியிருந்தார்கள். யுத்தங்களினால் மட்டுமல்ல, பொருளாதாரக் காரணங்களுக்காக ஆயினும் அகதிகளாக வருபவர்களை "படிப்பறியாத பாமரர்கள்" எனக் கருதிக்கொள்ளும் மேட்டுக்குடித் திமிர்த்தனம் அவர்களுக்கே உரியது.

அகதிகளாக வருபவர்களில் ஆரம்பக் கல்வியை முடிக்காத பலர் இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அதே நேரம், அதே அகதிகள் குழாமில், எத்தனை வைத்திய நிபுணர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்ட வல்லுனர்கள் இருக்கிறார்கள் என்ற விபரம் அவர்களுக்கு தெரியாது. சொந்த நாட்டில் யுத்தம் காரணமாக உயர்கல்வி வாய்ப்பை பறிகொடுத்த எத்தனை பேர், ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர்ந்தனர் என்பதை அறியவில்லை. இங்கே அந்த புள்ளிவிபரங்களை எடுத்துக் காட்டுவது எனது நோக்கமல்ல. ஆப்கானிஸ்தானை சேர்ந்த தூதுவர் ஒருவரின் குடும்பம் உட்பட, ஆப்பிரிக்காவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பலியான அரச அதிகாரிகள் என பலரை அகதி முகாமில் பார்த்திருக்கிறேன். அகதிகளாக வந்து அகிலம் அறிய வாழ்ந்தவர்கள் பலர் உண்டு. நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் புஷ்ஷின் அரசியல் ஆலோசகரான சோமாலிய அகதி, ஹிர்சி அலி. பிரான்ஸ் ஜனாதிபதியான ஹங்கேரிய அகதி, சார்கோசி. அயர்லாந்து லிஸ்பன் நகர மேயர் ஆகிய நைஜீரிய அகதி, அடெபாரி. இப்படி பல உதாரணங்களை அடுக்கலாம். "அடித்தட்டு மக்களின் கையறு நிலைக்கு காரணம் படிப்பறிவின்மை," என்று ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளும், ஆசிய "புத்திஜீவி" மாணவர்களும் ஒரே குரலில் பாடுவது எங்கோ நெருடுகின்றது.

அகதிகளை படிப்பறிவற்றவர்களாக வைத்திருக்கும் அநியாயம் ஐரோப்பாவில் சர்வசாதாரணம். பல நாடுகளில் அகதி என்றால் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே செய்ய முடியும் என்று சட்டம் போட்டு தடுக்கிறார்கள். காய்கறித் தோட்டங்கள், உணவுவிடுதி சமையலறைகள் போன்ற இடங்களில் மட்டுமே அகதிகளை வேலைக்கு எடுப்பார்கள். ஐரோப்பாக் கண்டத்தில் பணக்கார நாடான சுவிட்சர்லாந்து அகதிகளை மனுநீதி கொண்டு அடக்கி வைக்கின்றது. "உணவுவிடுதிகளில் கோப்பை கழுவும் வேலைக்கு மட்டுமே அனுமதி" என்று அடையாள பத்திரத்தில் எழுதி விடுகின்றது. அகதி முகாம்களில் மொழியைப் போதிப்பது கூட, அவர்களை ரெஸ்டோரன்ட் வேலைக்கு தயார்படுத்துவதாக இருக்கும்.

சுவிட்சர்லாந்தின் உத்தியோகபூர்வ மொழிகளான ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி கற்பிப்பது கூட சட்டபூர்வ அனுமதிப் பத்திரம் வைத்திருக்கும் அகதிகளுக்கு மட்டும் தான். அவர்களது தஞ்ச மனுக் கோரிக்கை மறுக்கப்பட்டால், அந்த உரிமையும் பறிக்கப்பட்டுவிடும். இந்த தடைகளை அறுத்தெறிய விரும்பிய சில அகதிகள் தமக்கென பாடசாலைகளை உருவாகிக் கொண்டனர். சூரிச் நகரில் சுவிஸ் இடதுசாரி இளைஞர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடம் ஒன்றில் இந்தப் பாடசாலை இயங்குகின்றது. அரசால் அங்கீகரிக்கப்படாத இலவசப் பாடசாலை, அகதிகளுக்காக அகதிகளாலேயே நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 150 மாணவர்கள் இங்கே கல்வி கற்கின்றனர். அனைவரும் சுவிட்சர்லாந்தில் விசா இன்றி தங்கியிருப்பவர்கள், அல்லது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியரும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அகதி தான்.

சுவிட்சர்லாந்தில் இரண்டு லட்சம் வரையிலான அகதிகள் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, எத்தனை வருடம் காத்திருந்தேனும் வதிவிட அனுமதியைப் பெறுவது. சுவிஸ் குடிவரவாளர் சட்டப்படி, குறைந்தது ஐந்து வருடங்கள் வசிப்பவர், அதே நேரம் சுவிஸ் சமூகத்தில் சிறப்பாக ஒத்திசைந்து வாழ்பவர் அனுமதிப் பத்திரம் பெற தகுதியுடையவர் ஆவார். ஆனால் சூரிச் போன்ற மாநிலங்கள், அவ்வாறு விண்ணப்பிப்பவர் ஜெர்மன் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது. 2008 ம் ஆண்டு, விசா அற்ற அகதிகள் சூரிச் நகர தேவாலயம் ஒன்றை ஆக்கிரமித்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். இரண்டு வாரங்கள் நீடித்த போராட்டத்தின் முடிவில், ஜெர்மன் மொழி கற்பிக்கும் பாடசாலை அமைக்கும் யோசனை தோன்றியது.

சட்டவிரோதமாக தங்கியிருந்த அகதிகள் பலர், மொழி அறிவு போதாமையால் விதிவிட உரிமையை இழந்தவர்கள். அகதிகளின் பாடசாலையில் சேர்ந்து ஜெர்மன் மொழி தேர்ச்சி பெற்ற பின்னர், வதிவிட அனுமதிப் பத்திரத்திற்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். பாடசாலையில் கல்வி போதிக்கும் அகதி ஆசிரியர்களுக்கு, சில ஜெர்மன் மொழி பேசும் சுவிஸ் ஆர்வலர்கள் உதவுகின்றனர். அனைவரும் இங்கே தொண்டர் ஆசிரியராகவே பணியாற்றுகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் விசா இன்றி தங்கியிருக்கும் அகதிகளில் ஒரு பிரிவினருக்கு, அரசாங்கம் சிறிதளவு பணவுதவி செய்கின்றது. ஒவ்வொரு வாரமும் 70 டாலர் பெறுமதியான காசோலை வழங்கப்படும். இந்த காசோலையை சூப்பர் மார்க்கட்டில் மாத்திரமே மாற்றி தேவையான பொருட்களை வாங்க முடியும். எக்காரணம் கொண்டும் பணமாக கொடுக்கப்பட மாட்டாது. அரசின் திட்டத்தை செயலிழக்க செய்யும் நோக்கோடு, சுவிஸ் இடதுசாரிகள் அந்த காசோலைகளை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார்கள். அகதிகள் அந்தப் பணத்தை பிரயாணச் செலவுகளுக்கு பயன்படுத்த முடிந்தது. அவ்வாறு தான் தூர இடங்களில் வசிக்கும் அகதிகள், சூரிச் பாடசாலைக்கு வந்து படிக்க முடிந்தது.

வெளிநாட்டவர்கள் சுவிஸ் சமூகத்துடன் இசைவாக்கம் பெற வேண்டும் என்று, சுவிஸ் அரசியல்வாதிகள் மேடை தோறும் முழங்கி வருகின்றனர். ஆனால் இசைவாக்கத்திற்கான ஒரு அகதியின் தன் முனைப்பை தடுப்பவர்களும் அவர்களே. ஒரு அங்கீகரிக்கப்படாத அகதி பாடசாலையில் சேர முடியாது, சட்டப்படி வேலை செய்ய முடியாது, வசதியான வீட்டில் வாழ முடியாது. ஒரு அகதியின் முன்னேற்றத்திற்கான அனைத்து வழிகளையும் அடைத்து விட்டு, இவர்களால் நாட்டிற்கு எந்தப் பயனும் இல்லை என்று அடித்து விரட்டுகிறார்கள்.

Monday, January 04, 2010

நூல் அறிமுகம்: "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா"

("வினவு" தளத்தில் தொடராக வந்த "ஆப்பிரிக்கர்கள் கண்டு பிடித்த இருண்ட ஐரோப்பா" நூலாக வெளிவந்துள்ளது. சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் இந்த நூல் கிடைக்கும். எனது ஆப்பிரிக்க தொடரை வெளியிட்ட வினவு தளத்திற்கும், அச்சிட்டு அழகிய நூலாக்கிய கீழைக்காற்று பதிப்பகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.)

வினவு தளத்தில் வந்த நூல் அறிமுகம்:



ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா
- கலையரசன், பக்கம்: 112, விலை ரூ.50.00

வினவில் தொடராக வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் கட்டுரை இப்போது அழகிய நூலாக வெளிவந்துள்ளது.

எண்ணெய் மணம் வீசும் அங்கோலா, நைஜீரியாதுள்ளிக் குதிக்கும் மீன் வளம் நிரம்பிய மேற்கு ஆப்பிரிக்கக் கடல், வேலையை வேகமாக முடிக்காத காரணத்தால் வெட்டப்பட்ட கறுப்பின மக்களின் கைகளில் ரப்பர்பால் வழியும் காங்கோ, கறுப்புத் தோலை உரித்து எடுக்கும் சூடானின் கட்டித் தங்கங்கள், உலகின் நாவுக்கு சாக்லேட்டின் மூலப்பொருளை வாரிவழங்கும் ஆப்பிரிக்காவின் ஐவரிகோஸ்ட், உலகுக்கே கோப்பியை ஏற்றுமதி செய்துவிட்டு எலும்பும் தோலுமாய் சாவை இறக்குமதி செய்யும் எத்தியோப்பியா…. இப்படி ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்களையும் அவைகளைக் கொள்ளையடித்து ஆப்பிரிக்க மக்களை பட்டினிச் சாவுக்கும், கொலை வெறிக்கும் ஆளாக்கும் இருண்ட ஐரோப்பாவை எளிய முறையில் நமக்கு அறிமுகம் செய்கிறது இந்நூல்.

இந்நூலாசிரியர் கலையரசன் தற்போது நெதர்லாந்தில் அகதியாக வாழும்ஈழத்தமிழராவார். புதிய வாசகர்களின் உலக அறிவிற்கும், தேடலுக்கும், முக்கியமாக உலக விசயங்களை அரசியல் ரீதியாக அணுகுவதற்கும் இந்நூல்பெரிதும் உதவும்.

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று விற்பனை அரங்கு, எண் 64-65

மனிதவாழ்வை மறுக்கும் முதலாளித்துவக் கொடுங்கோன்மைக்கு
மார்க்சிய-லெனினியமே ஒரே மாற்று
மக்களிடம் கொண்டு செல்லும் கீழைக்காற்று

சென்னை புத்தகக் கண்காட்சி
(டிச.30 – சன.10 வரை, ஜார்ஜ் பள்ளி,பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

கீழைக்காற்று விற்பனை அரங்கு, எண் 64-65

* உரைவீச்சுக்களாய், இசைப்பாடல்களாய், அரசியல் போராட்டக்காட்சிப்பதிவுகளாய், ..., வி.வி.மு, பு.மா..மு, பு..தொ.மு, மனித உரிமைப்பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளின் ஒலி,ஒளி வட்டுகள், பெரியார், அம்பேத்கார் படைப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அனைத்துஆக்கங்களும் கீழைக்காற்றில் கிடைக்கும்.
* வாருங்கள், நண்பர்களிடம் சொல்லுங்கள்!

(நன்றி: வினவு http://www.vinavu.com)

Sunday, January 03, 2010

அமெரிக்காவில் பெருகி வரும் கம்யூனிச பண்ணைகள்

வேலையின்மை, வீடிழப்பு, கடன் சுமை, டாலரின் வீழ்ச்சி. முடிவுறாது நீளும் முதலாளித்துவ பொருளாதார பிரச்சினைகள். மாற்று வழி தேடிய அமெரிக்கர்கள் தற்போது கம்யூனிச வாழ்க்கை முறைக்கு மாறி வருகின்றனர். இன்று அமெரிக்கா முழுவதும் பத்தாயிரத்துக்கும் அதிகமான கம்யூனிச கூட்டுறவுப் பண்ணைகள் உருவாகி விட்டன. கூட்டு உழைப்பினால் கிடைக்கும் வருவாயை பங்கிட்டுக் கொள்ளும் கம்யூனிச மாதிரிக் கிராமங்களில் பணம் பாவனையில் இல்லை. முதலாளித்துவ பொருளாதாரத்திற்கே இயல்பான பேராசையும் அந்த மக்களிடம் இல்லை. ஆயிரக்கணக்கான ஏக்கர்களைக் கொண்ட கம்யூனிச கிராமங்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு கைத்தொழில் ஆகியவற்றுடன் சிறிய அளவு தொழிற்துறை உற்பத்திகளைக் கொண்டுள்ளன. சுய சார்புப் பொருளாதாரத்தைக் கொண்ட பண்ணைகள், அதன் உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. நகரங்களில் காணப்படாத அயலாருடன் நட்புறவு, இயற்கையுடன் இணைந்து வாழ்தல், என்பன மக்களின் மகிழ்ச்சிக்கு உததரவாதம் அளிக்கின்றன.

அமெரிக்க வரலாற்றில் கூட்டுறவுப் பண்ணைகள் ஒரு புதுமை அல்ல. மொர்மன், எமிஷ் போன்ற புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ குழுக்களும், ஹிப்பிகளும் ஏற்கனவே கூட்டுறவுப் பண்ணைகளை வாழ்வாதாரமாக கொண்டு இயங்கி வருகின்றன. கிறிஸ்தவ குழுக்களின் மதப் பழமைவாத வாழ்க்கை நெறியும், ஹிப்பிகளின் போதைக் கலாச்சாரமும் முன்னைய கூட்டுறவுப் பண்ணைகளின் சீர்குலைவுக்கு காரணமாக இருந்தன. ஆனால் கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தோன்றிய மதச்சார்பற்ற கூட்டுறவுப் பண்ணைகளில், போதைப்பொருள் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. நவீன கம்யூனிச கிராமங்களில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பொதுக்குழு முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்காவில், வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஒரு கம்யூனிசக் கிராமத்தை பற்றிய வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு:
Thriving communes no haven for 'deadbeats'